பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான 3-வது வாக்கெடுப்பும் தோற்கடிப்பு!

உலகம் . March, 30 2019

news-details

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நிராகரித்தனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

ஒப்பந்தத்திற்கு எதிராக 344 வாக்குகளும், ஆதரவாக 286 வாக்குகளும் பதிவாகின.

இந்த ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் ஏற்கெனவே இரு முறை நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில், மீண்டும் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினர் பிரதமர் தெரசா மேவுக்கு புதன்கிழமை நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்கப்பட்டு, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, பதவி விலகப் போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

இதுவரை அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த வேறு சில எம்.பி.க்களும் தங்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், பிரெக்ஸிட்டுப் பிறகும் வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து நாட்டுக்கு இடையே வர்த்தக எல்லை வகுக்கப்படாது என்ற அந்த ஒப்பந்தத்தின் அம்சத்துக்கு, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பிரித்தானிய ஒன்றிய ஆதரவுக் கட்சியான டியூபி எதிர்ப்பு தெரிவித்தது.
அந்த ஒப்பந்தத்தால் பிரிட்டனின் ஒருமைப்பாடு குலைக்கப்படும் என்று அந்தக் கட்சி அச்சம் தெரிவித்தது.

அதையடுத்து, டியூபி கட்சி ஏற்றுக்கொண்டால்தான் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரிக்கப்போவதாக ஏராளமான எம்.பி.க்களும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நிராகரித்துள்ளனர்.