மத்திய தரைக்கடலில் படகு மூழ்கியது: 170 அகதிகள் உயிரிழப்பு?

உலகம் . February, 08 2019

news-details

மத்திய தரைக்கடலில் இரண்டு படகுகள் வெவ்வேறு இடங்களில் மூழ்கியது. இந்த விபத்தில் 170 அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் இரு படகுகள் வெவ்வேறு இடங்களில் கவிழ்ந்ததில், 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.சுமார் 117 பேர்கள் பயணித்த படகானது, லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் கூறுகிறது.


53 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு படகு, மத்திய தரைக்கடலின் மேற்குப்பகுதியிலுள்ள அல்போரான் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அந்த கப்பலில் உயிர் தப்பி சுமார் 24 மணிநேரங்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மொரோக்கோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இருந்தபோதிலும், இரு கப்பல்களும் சரியாக எந்த பகுதியில் கவிழ்ந்தது, அதிலிருந்தவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் தெரியாமல் உள்ளது.

இரண்டாவது கப்பல் கடந்த சனிக்கிழமையன்று லிபியாவிலிருந்து புறப்பட்டதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.