உலகம் . January, 07 2021
அமெரிக்க காங்கரஸ் கட்டடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் டொனால்ட் ட்ரம் ஆதரவாளர்கள் தாக்குதல். வாஷிங்டனில் ஊரடங்கு அமூல்.
iTamilWorld: 6/1/2021: இன்று அமெரிக்க நாடாளுமன்றம் என்று கூறப்படுகின்ற வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் கட்டடத்தை நோக்கி டொனால்ட் ட்ரம் ஆதரவாளர்கள் பெரும் எடுப்பில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வந்தனர். இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்தக் கூட்டங்களில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடனின் தெரிவை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ட்ரம் ஆதரவாளர்கள் ட்ரம் இன் தூண்டுதலின் பேரில் அணிவகுத்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களது ஆர்ப்பாட்டம் எல்லைமீறி கலவரமாக மாறியது. அவர்களில் ஒரு பகுதியினர் கட்டடத்திற்குள்ளேயும் புகுந்து கலவரம் செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைப் பாதுகாக்க சிதறி ஓடும் நிலை ஏற்பட்டது .பாதுகாப்புப் படையினரையும் தள்ளிக்கொண்டு அவர்கள் உள்ளே சென்றுவிட்டனர். இறுதியில் ஒருகட்டத்தில் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் பெண் ஒருவர் காயமடைந்தார் என்றும் , 13 பேர் கைது செயப்பட்டனர் என்றும் 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் இதுவைரையான தகவல்கள் தெரிவிகின்றன. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமூல் படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலை வரும் 20ம் திகதி அமெரிக்காவின் அடுத்த ஜனாபதியாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் வன்மையாகக் கண்டித்தார். இது அமெரிக்காவை தலைகுனிய வைக்கும் செயல் என்றும் இது அமெரிக்காவின் வழி அல்ல என்றும் இவை இப்பொழுதே முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோபமாகக் கூறினார்.