தமிழக மீனவருக்கு வெலிக்கடை சிறை!

இலங்கை . March, 26 2019

news-details

சட்டமா அதிபர் திணைக்கள அறிவுறுத்தலின் பிரகாரம் நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழக மீனவர் ஒருவருக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் 2ஆம் தடவையும் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவருக்கே இரண்டாண்டு சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.

அதனை அடுத்து அவர்கள் மீரிகம தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவர், இதே குற்றச்சாட்டுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம், நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து வழக்கை மீளாய்வு செய்யுமாறு நீரியல்வளத் துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து குறித்த மீனவர் தொடர்பில் கடந்த 22ஆம் திகதி, சட்டமா அதிபர் திணைக்களம் நீரியல்வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மீனவருக்கு 2 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மீரிகம தடுப்பு முகாமிலிருந்த இந்திய மீனவர் தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.