முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரே அணியில் அனுஷ்டிக்க வேண்டும்! – பல்கலைக்கழக மாணவர் ஒன்றிம்

இலங்கை . February, 18 2019

news-details

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனைவரும் ஒரே அணியில் நின்று அனுஷ்டிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு கல்லடி, போய்ஸ் ஒஃப் மீடியாவில் நடைபெற்றது.

இதன்போது, முரண்பாடுகளைக் களைந்து, தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ய வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் புவிராஜ் தெரிவித்தார்

இந்த நோக்கத்துக்காகவே, யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து அனைத்து பொது அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஓரணியில் நின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தமிழர்களுக்கான எந்தவித நன்மையினையும் செய்யாத நிலையே இருந்து வருவதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்

அரசியல்வாதிகள் மே-18 நெருங்கும்போதே முள்ளிவாய்க்காலை நினைத்துப் பார்ப்பதாகவும் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லையெனவும் குறிப்பிட்டார். ஆனால் நினைவேந்தல் நிகழ்வினை அவர்கள் உரிமை கோரமுடியாது எனவும் தெரிவித்தார்.