இலங்கை . August, 17 2020
இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம். நான்கு தமிழர்கள் அமைச்சரவையில்.
இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்ச்சி கடந்த 12ம் திகதி நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் சிறுபான்மை இனத்தவர்களில் நான்கு பேருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு வைபவத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பெருபாலானோருக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் தமிழர்கள் சார்பில் கடல்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், தோட்ட் வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சராக ஜீவன் தொண்டைமானும், தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடகத் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் , நீதி அமைச்சராக அலி ஷப்ரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மனோகணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் வேலுகுமார், ரிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம் ஆகியோர் இந்த முறை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து போட்டியிட்டு எதிர்க்கட் சியில் இருக்கின்றனர்.