2020 இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அணி அமோக வெற்றி ; வடக்குக் கிழக்கில் தனது ஆதிக்கத்தை இழந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .

இலங்கை . August, 09 2020

news-details

2020 இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அணி அமோக வெற்றி ; வடக்குக் கிழக்கில் தனது ஆதிக்கத்தை இழந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற தாமரை மொட்டுக் கட்சி அதிகூடிய வாக்குகளாக 68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை ஈட்டியுள்ளது. 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 150 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன 145 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளை பெற்று 54 ஆசனங்களைத் தனதாக்கிக்கொண்டது.
அடுத்து தேசிய மக்கள் சக்தியாகிய ஜே வி பி 4 லட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகளை பெற்று 3 ஆசனகளைப் பெற்றது.
நான்காவதாக இலங்கை தமிழரசுக் கட்சி 3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஏனையவை 2 அல்லது 2ற்குக் குறைவான ஆசனங்களை பெற்றுள்ளன.
இந்தப் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கடைசியின் வீடு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான ஏகபிரதிநிதித்துவம் என்ற நிலையை இழந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் செயலாளர் துரைரத்தினம் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர் . அதேபோன்று நீண்ட காலமாக இலங்கையில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் எந்தவித ஆசனங்களையும் பெறவில்லை என்பதும் அதன் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரசிங்க படுதோல்வி அடைந்தது என்பதும் , அத்துடன் மாறிமாறி ஆட்சிசெய்த மற்றோரு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஆசனம் மட்டும் பெற்றது என்பதும் மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.