இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? பிளவுபட்ட தமிழ் அரசியல் தலைமைகள்; சிங்கள மக்களின் வாக்குகளில் மட்டும் தங்கியிருக்கும் மகிந்த அணி .

இலங்கை . July, 24 2020

news-details

இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? பிளவுபட்ட தமிழ் அரசியல் தலைமைகள்; சிங்கள மக்களின் வாக்குகளில் மட்டும் தங்கியிருக்கும் மகிந்த அணி .

இலங்கை அரசியல் இன்று பல தில்லுமுல்லு விளையாட்டுகளுக்கும் அரசியல் சதித் திட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒரு அணியும் அந்தக் கட் சியின் உபதலைவரான சஜித் பிரேமதாசா (அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தவர்) தலைமையில் இன்னொரு அணியுமாக பிளவுப்படுள்ளனர். இன்னோரு பக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன பலமிழந்து காணப்படுகிறார். ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சாவின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்குப் பின் ராஜபக்ச அணி மேலும் வலுவடைந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகொள்ளும் உத்திகளில் முழுமுனையுடன் ஈடுபட்டனர். ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் மட்டும் வெற்றிபெற்ற ராஜபக்ச அணி எதிர் அணியினரை பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளிலும் பலவீனப் படுத்தும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர் .மறுபக்கம் தமிழ் மக்கள் பிரச்சனையையோ தீர்வுகளை பற்றியோ அவர்கள் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. சிங்களமக்கள் வாக்குகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட அவர்களது தேர்தல் வெற்றித்திட்டத்திற்கு தமிழ்மக்கள் பிரச்சனை தேவையில்லை. ஏனென்றால் , அவர்களது சூழ்ச்சித் திட்டத்தில் சில தமிழ் அரசியல் தலைமைகளும் உள்வாங்கப் பட்டுள்ளனர். இலங்கையில் இனவிடுதலைப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே பலமான அமைப்பாக இருந்தது. அரசியல் என்பது உளநோக்கு ஒன்றாகவும் வெளிப்பேச்சு இன்னோன்றாகவுமே இருப்பதே ஒருவித தந்திரமாகிவிட்டது. இலட்சிய வேட்கை, உரிமைக்குரல் என்பன பேரம்பேசும் நிலைக்கு வந்துவிட்டது. சிலர் தத்தம் சுயலாபங்களை கருத்திற் கொண்டு செயல்படுகின்றனர். ஒரே அணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இயங்கியவர்களில் சிலர் வேறுமுகமாக இயங்கத் தொடங்கினர். ஒரே அணியாக இயங்கி ஒற்றுமையின் பலத்தை நிரூபிக்க வேண்டியவர்களே, தமிழன் என்றால் காட்டிக்கொடுப்பவன் குழிபறிப்பவன் என்ற தோரணையை இங்கும் தோற்றுவித்தனர். இதுவே சிங்கள அரசியல் தலைமைகளின் வெற்றிகளுக்கும், தமிழ் மக்கள் பிரச்சனைகளில்
இழுத்தடிப்புகளுக்கும் காரணமாகும் என்பதை உணர்ந்து உணராதவர்களாக தமிழ் அரசியல் வாதிகள் இருப்பது கொடுமையிலும் கொடுமை. வெறுமனே மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டு இயலாமையில் இருப்பதே வழமையாகிவிட்டது . உறுதியான தலைமையை உருவாக்கத் தவறிவிட்டனர். இன்று தமிழ்த் தலைமைகள் திசைக்கு ஒன்றாகப் பிரிந்து பின்னர் அவர்களுக்குள் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து செயல்படும் நிலையில் காலம் இறங்கியுள்ளனர். மக்களின் தீர்ப்பு எப்படி அமையுமோ? மீண்டும் ஏமாளிகளாகக் காத்திருப்போம்.