இலங்கை தற்கொலை குண்டுதாரி குறித்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்: பிரபல பயங்கரவாதி நீல் பிரகாஷ்டன் தொடர்பு?

இலங்கை . April, 28 2019

news-details

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் தாக்குதல்தாரிகளில் ஒருவரான அப்துல் லதீத் ஜமீல் முகமத் அவுஸ்திரேலியாவில் இருக்கையில் அந்நாட்டை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதியான நீல் பிரகாஷ் என்பவருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நீல் பிரகாஷ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து அபு கலீத் அல் கம்போடி என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இவரது அவுஸ்திரேலிய குடியுரிமை 2018 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மார்ச்சில் பயங்கரவாதி என குற்றம்சாட்டப்பட்டு துருக்கி அரசால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அந்த தண்டனை 6 ஆண்டுகள் என உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் அப்துல் லதீத் ஜமீல் படித்தபோது அவுஸ்திரேலிய பயங்கரவாத குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என கூறப்படுகிறது. பயங்கரவாத தொடர்பு மற்றும் நீல் பிரகாஷ்டன் இருக்கும் தொடர்பு குறித்து அப்துலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய – காஷ்மீர் பிரச்சனை, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் போர் பயிற்சி ஆகியவை குறித்து அவுஸ்திரேலியாவில் கற்றுக்கொண்ட பின்னர் சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். அதன்பின்னரே, சிரியாவில் இருந்து இலங்கை வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்ட பயங்கரவாதி நீல் பிரகாஷ்டன் இணையதளம் வாயிலாக தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டார் அப்துல். இவர்கள் இருவருக்குமிடையேயான உறவு குறித்த முழு தன்மை விசாரணை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் குறைந்தபட்சம், முகம்மதுக்கும் பிரகாஷ்க்கும் இடையே ஒரு இணையதளம் இணைப்பு இருந்தது என்று ஆதாரம் தெரிவிக்கின்றது.