ஏப்ரல் 29 ஆம் திகதி வரை கோட்டாவுக்கு அவகாசம்!

இலங்கை . April, 17 2019

news-details

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான பிரதிவாதியான கோட்டாபய பதிலளிக்க எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரிடம் அதனை உரிய முறையில் அறிவித்துள்ளதாகவும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இரண்டு சமஷ்டிச் சட்டங்கள் இருக்கின்றன. வெளிநாட்டில் சேதத்தை ஏற்படுத்திய குற்றம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அல்லது வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு மனுவொன்றைத் தாக்கல் செய்யவோ பிரதிவாதி தரப்புக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது. அவர் பதிலளிக்கவில்லை என்றால், பிரதிவாதியின்றியே வழக்கை விசாரிக்க முடியும்.
குற்றவியல் வழக்குப் போன்று இந்த வழக்கில் எவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படாது. எனினும், நிதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது