அதிகாரப்பகிர்வு விவகாரம் – அடுத்தவாரம் ஜனாதிபதியை சந்திக்கிறார் சம்பந்தன்!

இலங்கை . April, 05 2019

news-details

அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சம்பந்தன்,சுமந்திரன் ஆகியோர் சந்தித்து உரையாடவுள்ளனர். நேற்று ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் இடையே இடம்பெற்ற குறுகியநேர சந்திப்பின்போது இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது

.இதுவரை இடம்பெற்ற அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளின்போது அதிகாரப் பரவலாக்கல் விடயங்களில் பல்வேறு கட்சிகளிடையேயும் இணக்கநிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தாமதமடைந்தாலும் குறைந்த பட்சம் இணக்கம் காணப்பட்ட அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகளையாவது அரசியலமைப்பு திருத்தமாகவேனும் கொண்டு வரச் செய்வதற்கு வலியுறுத்துகிறது கூட்டமைப்பு.

அந்த திட்டத்தின் அடிப்படையில் கட்சித்தலைவர் கூட்டம் ஒன்றை ஜனாதிபதி அழைத்து அந்தக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்தமையும் அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வரப்படக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் விடயங்களை கண்டறிந்து பரிந்துரை செய்வதற்கு சுமந்திரன், ராஜித சேனாரத்ன,சரத் அமுனுகம,டிலான் பெரேரா,ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை அக்கூட்டத்தில் ஜனாதிபதி அமைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் வடக்கு கிழக்கு செயலணிக் கூட்டத்துக்கு பங்குபற்ற வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அக்கூட்டம் முடிந்ததும் சம்பந்தன் -சுமந்திரன் இவ்விடயத்துக்கான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டுக் கொண்டனர். எதிர்வரும் வெள்ளியன்று வரவு செலவுத்திட்ட விவகாரம் முடிவடைந்ததும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தருவார் என ஜனாதிபதி சம்பந்தனுக்கு உறுதியளித்துள்ளதாக தெரியவருகிறது.

எனவே இந்தச் சந்திப்பு அனேகமாக அடுத்தவாரம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.