கையில் காயம்பட்ட வலியுடன் விளையாடி அரைசதம் விளாசிய பஞ்சாப் அணி வீரர்!

விளையாட்டு . April, 11 2019

news-details

மொஹாலியில் நடந்த சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் அணி வீரர் மயங்க் அகர்வால் கையில் காயம்பட்ட வலியுடன் ஆடியது பாராட்டுக்குரியது என சக அணி வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ராகுல் 71 ஓட்டங்களும், மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களும் விளாசினர்.

இந்தக் கூட்டணி 114 ஓட்டங்கள் குவித்தது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கையில் காயம்பட்ட வலியுடன் ஆடிய மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்நிலையில் மயங்க் அகர்வாலை பாராட்டிய கே.எல்.ராகுல் கூறுகையில், ‘முதல் 2 போட்டிகளில் நான் விரும்பிய தொடக்க கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய அரைசதங்கள் அனைத்தும் இலக்கை விரட்டும்போது வந்துள்ளது. நான் என் பேட்டிங்கை மனமகிழ்ச்சியுடன் ஆடுகிறேன்.

கெய்லுடன் சில காலமாக ஆடி வருகிறேன். மயங்க்குடன் சிறுபிராயம் முதல் ஆடி வருகிறேன். மயங்க் இறங்கி ஆடிய விதம் நான் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ள உதவியது.

விரலில் காயம்பட்டு அவர் கடும் வலியில் இருந்தார். ஆனாலும் அவர் இறங்கி இப்படிப்பட்டதொரு இன்னிங்சை ஆடியது மிகுந்த பாராட்டுக்குரியது’ என தெரிவித்துள்ளார்.