வட அமெரிக்காவில் வாசுகி ஜெயபாலனின் "தமிழோடு விளையாடு" தமிழ் கற்றல், கற்பித்தலில் நவீன அணுகு முறை!

வாழ்வியல் . March, 18 2019

news-details

வட அமெரிக்காவில் வாசுகி ஜெயபாலனின் "தமிழோடு விளையாடு" தமிழ் கற்றல், கற்பித்தலில் நவீன அணுகு முறை!

உலகெங்கிலும் பரந்துபட்டு வாழும் இரண்டாம் தலைமுறையினர் என்ற வகைக்குள் அடங்குகின்ற தமிழ் மாணவ, மாணவியர்கள் அந்தந்த நாடுகளில் எமது தாய் மொழி தமிழை மறக்காமல் இருப்பதற்கும், தமிழ், தமிழன், தமிழ்க் கலாச்சாரம் என்ற அடையாளங்களை நிலை நிறுத்தி வைப்பதற்குமென தமிழ் மொழியை கற்று வருவது தெளிவாக தென்படுகின்றது. இந்நிலை மிக வரவேற்கப்பட வேண்டியதே.

இந்நிலை தொடர வேண்டுமென்ற ஆதங்கத்தில் புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ச் சமூக அமைப்புக்கள் ஆங்காங்கே தமிழ்ப் பாடசாலைகளை நிறுவி மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம், எழுத்து, பேச்சு, வாசிப்பு பயிற்சிகள் அளித்து வருவது மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்து வருகின்ற போதிலும், தமிழ் மொழிக் கற்பித்தலில் முறைப்படி பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியகளுக்கான பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் தமிழ் கற்றல் ஆர்வம் சற்று பின்னடைந்து வருவதையும் நாம் அறிவோம். தமிழ் மொழி கற்பித்தல் முறையில் மாணவர்களின் கற்றல் முறை, தமிழ் மொழி கிரகித்தல், பாடவிதான நுணுக்கங்கள் போன்ற பல காரணிகளை ஆராய்ந்து அதற்கேற்ப எமது கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்ளுதல் மிக இன்றியமையாததாகும். இரண்டாம் தலைமுறையினர் தமிழ் மொழியை தமது விருப்ப பாடமாக தெரிவு செய்ய தூண்டும் வகையில் தமிழ் கற்பித்தல் முறையில் நவீன முறைகளை புகுத்துவது மிக அவசியமான ஓர் விடயமாகும்.

யாழ் பல்கலைக்கழகம், இந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களில் தனது மேற் பட்டபடிப்பை முடித்துக் கொண்ட திருமதி வாசுகி அவர்கள், தமிழுக்கு சேவை செய்யவென தனது வாழ் நாளை ஒதுக்கியுள்ளதாக என்னிடம் மிக மகிழ்வுடன் தெரிவித்தார். தமிழ் மொழியினை அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முயற்சியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தியுளார். தமிழர் வாழும் நாடுகளுக்கு சென்று அங்கு தமிழ் வளர்ச்சி சம்மந்தமான அறிவுரைகள், பயிற்சிப் பட்டறைகளை நடாத்த திட்டமிட்டுள்ளார்.

தற்பொழுது நோர்வே நாட்டில், ஒஸ்லோ நகரில் வசித்து வரும் திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களின் பல வருட ஆய்வின் பலனாக இசை, உடல் அசைவுகளின் உதவியுடன் தமிழ் மொழி கற்பித்தல் முறையில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். கர்நாட இசைத்துறையில் பாண்டித்தியம் பெற்ற வாசுகி அவர்கள், தமிழ் மொழியில் கொண்ட தீவிர ஆர்வத்தால் "தமிழோடு விளையாடு" என்ற தலைப்பில் தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துக்களையும் இசை மூலமாக கற்பிக்கும் ஓர் இலகு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி வாசுகி அவர்களின் இந்த முயற்சியானது ஏற்கனவே லண்டன், ஜெர்மனி, இலங்கை, நோர்வே போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர் வாழ் தமிழ்ச் சமூகத்தினரினதும், தமிழ் மொழியைக் கற்கும் மாணவ, மாணவியர்களினதும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்பொழுது நோர்வே நாட்டிலுள்ள வெள்ளையினத்தை சேர்ந்த பல மாணவர்கள், ஆசிரியர்கள் திருமதி வாசுகி அவர்களின் வழி நடாத்தலில் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல பாகங்களுக்கும் சென்று தமிழ் கற்பித்தல் தொடர்பான ஆலோசனைகளையம் பயிற்சி பட்டறைகளையம் நடாத்தி வரும் வாசுகி அவர்கள் வருகின்ற மார்ச் 16, 17, 23, 24 திகதிகளில் அமெரிக்காவில் நியூ ஜெர்சி, நியூயார்க், வட கரோலினா ஆகிய மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலை நிர்வாகத்தினரின் அழைப்பின் பெயரில் அங்கு சென்று பல தமிழ் கற்பித்தல் பயிற்சிப் பட்டறைகளை நடத்தவுள்ளார். நியூ ஜெர்செயில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் மன்ற அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டறையில் நியூ ஜெர்செயின் பல பாகங்களிலிருந்தும் தமிழ்ப் பெற்றோர், மாணவர்கள், தமிழ் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

திருமதி வாசுகி அவர்கள் தனது ஆய்வை தொடர்ந்து செய்வதன் மூலம் தமிழ் மொழி கற்பித்தலில் மேலும் பல உத்தி முறைகளை கண்டறிந்து அவற்றை இரண்டாம் தலைமுறை மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென புலம் பெயர் வாழ் தமிழ் சமூகத்தினரின் சார்பில் மிக அன்பாக கேட்டுக்கொள்கிறேன். திருமதி வாசுகி ஜெயபாலன் போன்ற தமிழுக்கு சேவை செய்யும் பல தமிழ் அறிஞர்கள் எம்மத்தியில் உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 0047 984 03067 Whatsapp அல்லது Viber ஊடாக அழைக்கவும்.

தகவல்,
ஞானசேகரன் செல்லையா
New Jersey, USA.